Friday, July 17, 2009

உ. வே. சாமிநாதையர் (U. V. Swaminatha Iyer)

உ. வே. சாமிநாதையர் (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா) ஒரு தமிழறிஞர். பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது. உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.

ஆரம்பநாள் வாழ்க்கை

சாமிநாதையர் பெப்ரவரி 19, 1855 ல் தமிழ் நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசை கலைஞர் ஆவார். உ.வே.சா அவர்கள தனது ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 வருடங்களாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியிலிருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

ஏட்டுச்சுவடி மீட்பு

உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே இராமசாமி முதலியார் என்பவரை சந்தித்து நட்பு கொண்டார்.இவரே உ.வே.சாவின் பின்னை நாட்களில் ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவராவார். இவரால் உ.வே.சா விற்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயகாழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும்,அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களை தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார்.அதனை அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது.

இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலப்பிரதிகளை தேடி சேமித்து,பகுத்து,பாடபேதம் கண்டு,தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்தார். முடிவில் கிடைத்தவற்றினை அச்சேற்றினார். செய்யுள், புராணங்கள், பக்தி, காப்பியம் என பல்வேறு வகைப்பட்ட ஒலைச்சுவடியாக இருந்த 90 ற்கு மேற்பட்ட இலக்கியங்கள் இவரால் புத்தக வடிவானது. இவர், சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை’’ போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

அச்சு பதித்த நூல்களின் பட்டியல்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்

பட்டங்கள்

தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.

சுயசரிதம்

உ.வே.சாமிநாதையர் தனது சுயசரிதத்தை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார், இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment