Friday, July 17, 2009

திருப்பூர் குமரன் (Tirupur Kumaran)

தேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் அக்டோபர் 4ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தார்.

குறைந்த வருமானத்தால் சிரமப்பட்டாலும், வறுமையிலும் பிறர்க்கு உதவிகள் செய்வதில் குமரன் யாருக்கும் சளைத்தவர் இல்லை. இளம் வயதிலேயே நாட்டுப்பற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர். விடுதலை வேட்கையால் அதிகமாக உந்தப்பட்டு, திருப்பூரில் தொடங்கப்பட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் முதல் ஆளாக பங்கேற்று, பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அந்த நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார் குமரன்.

அப்போது காவலர்களால் போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டனர். தடியடிக்கு குமரனும் ஆளானார். தேசியக் கொடியை கிழே போட்டு விட்டால் விட்டு விடுவதாக காவலர்கள் கூறியதை மறுத்து கோஷங்கள் எழுப்பியதால் கடுமையாக தாக்கப்பட்டார். மண்டை பிளந்து, உடல் முழுவதும் ரத்தம் சிந்தி மயங்கும் நிலையிலும், கையிலிருந்து இந்திய தேசியக் கொடியை கீழே விடாமல் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் துறந்தார். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

1 comment: