Friday, July 17, 2009

கண்ணதாசன் (Kavignar Kannadasan)

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீக குருவாகக் கொண்டவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

படைப்புகள்
வனவாசம் (சுயசரிதை)
இயேசு காவியம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
கண்ணதாசன் கவிதைகள் (7 தொகுதிகள்)
திரைப்படப் பாடல்கள்

நாவல்
சேரமான் காதலி
விளக்கு மட்டுமா சிவப்பு?
அதைவிட இரகசியம்
ஆச்சி
சிங்காரி பார்த்த சென்னை
பிருந்தாவனம்
ஆயிரங்கால் மண்டபம்

நாடகம்
சிவகங்கைச் சீமை
ராஜ தண்டனை
அனார்கலி
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு மகனாக எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றினார்.

தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். கல்யாணசுந்தரம் அவர்கள். இளம் பிராயத்திலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டவர். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டவர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (Namakkal Kavignar V. Ramalingam Pillai )

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கத்தியின்றி ரத்தமின்றி
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் (கத்)

ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு
உயிர்பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டை
யொன்று புதுமையே (கத்)

குதிரையில்லை யானையில்லை
கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை
ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)

கோபமில்லை தாபமில்லை
சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கை யொன்றும்
பண்ணுமாசை யின்fறியே (கத்)...

தமிழன் என்றொரு இனமுண்டு
தமிழன் என்றொரு இனமுண்டு
தனயே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனர்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்த்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகாரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணிமணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும்f தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னதெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப்போரில் கடனிருந்தான்
சாந்தம் தவ$ துடனிருந்தான்

உ. வே. சாமிநாதையர் (U. V. Swaminatha Iyer)

உ. வே. சாமிநாதையர் (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா) ஒரு தமிழறிஞர். பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது. உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.

ஆரம்பநாள் வாழ்க்கை

சாமிநாதையர் பெப்ரவரி 19, 1855 ல் தமிழ் நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசை கலைஞர் ஆவார். உ.வே.சா அவர்கள தனது ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 வருடங்களாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியிலிருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

ஏட்டுச்சுவடி மீட்பு

உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே இராமசாமி முதலியார் என்பவரை சந்தித்து நட்பு கொண்டார்.இவரே உ.வே.சாவின் பின்னை நாட்களில் ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவராவார். இவரால் உ.வே.சா விற்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயகாழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும்,அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களை தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார்.அதனை அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது.

இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலப்பிரதிகளை தேடி சேமித்து,பகுத்து,பாடபேதம் கண்டு,தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்தார். முடிவில் கிடைத்தவற்றினை அச்சேற்றினார். செய்யுள், புராணங்கள், பக்தி, காப்பியம் என பல்வேறு வகைப்பட்ட ஒலைச்சுவடியாக இருந்த 90 ற்கு மேற்பட்ட இலக்கியங்கள் இவரால் புத்தக வடிவானது. இவர், சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை’’ போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

அச்சு பதித்த நூல்களின் பட்டியல்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்

பட்டங்கள்

தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.

சுயசரிதம்

உ.வே.சாமிநாதையர் தனது சுயசரிதத்தை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார், இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai)

தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர்.

வரலாறு
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

தூக்கிலிடப்படல்
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

கௌரவிப்பு
முன்பு தீரன் சின்னமலை நினைவாகப் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalinga Thevar)

வாழ்க்கைக்குறிப்பு
முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.

1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார். அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார்.

சட்டசபை வாழ்க்கை
முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப் பட்டார். பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத் துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்தார். கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத் துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

நேதாஜியை கவர்ந்தவர்
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.

கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.

ராமநாதபுரம் கலவரம் 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது. அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராம லிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்ககா வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்.

மறைவு

அனைத்துக்கட்சியினர் அஞ்சலி
தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார்.

மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.

கடைசி விருப்பம்
"என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம், 30_ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர். தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அனுதாபக் கூட்டம்
அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள். அண்ணா பேசுகையில் கூறியதாவது:
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."
இவ்வாறு அண்ணா கூறினார்.

காமராஜர்
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.

திருப்பூர் குமரன் (Tirupur Kumaran)

தேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் அக்டோபர் 4ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தார்.

குறைந்த வருமானத்தால் சிரமப்பட்டாலும், வறுமையிலும் பிறர்க்கு உதவிகள் செய்வதில் குமரன் யாருக்கும் சளைத்தவர் இல்லை. இளம் வயதிலேயே நாட்டுப்பற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர். விடுதலை வேட்கையால் அதிகமாக உந்தப்பட்டு, திருப்பூரில் தொடங்கப்பட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் முதல் ஆளாக பங்கேற்று, பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அந்த நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார் குமரன்.

அப்போது காவலர்களால் போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டனர். தடியடிக்கு குமரனும் ஆளானார். தேசியக் கொடியை கிழே போட்டு விட்டால் விட்டு விடுவதாக காவலர்கள் கூறியதை மறுத்து கோஷங்கள் எழுப்பியதால் கடுமையாக தாக்கப்பட்டார். மண்டை பிளந்து, உடல் முழுவதும் ரத்தம் சிந்தி மயங்கும் நிலையிலும், கையிலிருந்து இந்திய தேசியக் கொடியை கீழே விடாமல் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் துறந்தார். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.